அன்றாடம் மாறி வரும் காலநிலைகள் காரணமாக நாளுக்கு நாள் வானிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் புவி வெப்பமயமாதல், கடும் குளிர், கடும் வறட்சி, அதிகப்படியான மழை என்று வானிலை தன்னுடைய நிலைப்பாட்டை இழந்து வருகிறது என்று தான் கூறவேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், அதற்கு முன் ஏற்பட்ட புயல், வெப்ப அலை வீச்சு என அனைத்தும் வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாக கணிக்க முடிகிறது. இருந்தபோதும், மிக்ஜாம் புயலை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், மழை குறித்த தகவல்கள் வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாக குறிப்பிடவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு வானிலை ஆய்வு மையம் சார்பிலும் அதற்கான விளக்கமும் கூறப்பட்டது.
வானிலை ஆய்வு மையத்தால் என்ன நிலவரமோ அதனை தான் கூற இயலும் என்றும், திடீரென்று மாறும் வானிலை காரணமாக இவ்வாறு நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நிகழும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணக்கீடு செய்ய 2 வானிலை ரேடார்கள் (Weather radar in TN) அமைக்கப்படும் என்று மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் (vaanilai radar) விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் 2 ரேடார்களும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு ரேடாரும் உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் வானிலை நிலையை கணக்கீடு செய்வதற்காக இந்த 2 ரேடார்கள் பொறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ரேடார்கள் உதவியாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் (Ravichandran as Secretary, Ministry of Earth Sciences) தகவல் தெரிவித்துள்ளார்.