சிவராத்திரி என்பது வருடம் தோறும் கொண்டாடப்படும் ஒரு விழாவாக உள்ளது. இந்த நாளில் மக்கள் அனைவரும் இரவு முழுவதும் உறங்காமல் இருந்து ஈசனை வழிபாடு செய்வர். பலர் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வர். சிலர் வீடுகளில் இருந்து வழிபாடு செய்வர். இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் வெகு விமர்சையாக இருக்கும்.
இந்த நிலையில்தான் இந்த வருடம் மகா சிவராத்திரி திருநாள் வரும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக பிரபல சிவன் கோவில்களில் மக்கள் கூட்டம் நிச்சயம் அதிகரிக்கும். எனவே மக்களின் சிரமத்தை தீர்க்கவும் அனைவரும் கோயில்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், இந்த ஆண்டு சிவராத்திரி வார இறுதியில் வருவதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் (Maha Shivratri Special Buses) இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி வரும் மார்ச் 8-ம் தேதி, மற்றும் மார்ச் 9, 10 ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் இதர இடங்களுக்கும் தமிழகம் முழுவதும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
அதன்படி சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் மார்ச் 7-ம் தேதி 270 பேருந்துகளும், மார்ச் 8-ம் தேதி 390 பேருந்துகளும், மார்ச் 9-ம் தேதி 430 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 8 மற்றும் 9-ம் தேதி 70 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. அதன்படி வியாழக்கிழமை அன்று 9,096 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7,268 பயணிகளும் சனிக்கிழமை 3,769 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொலைதூர பயணம் செய்ய விரும்புவோர் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சி தியேட்டர்களில் ஒளிபரப்பு..! மகிழ்ச்சியில் மக்கள்..! |