நம் இந்தியவின் அரசியலமைப்பு (Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். மேலும் இச்சட்டமானது உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக உள்ள சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஆகும். மேலும் உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் தான்.
இச்சட்டமானது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு ஆகும். அதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் பற்றி சிலருக்க தொரிந்தாலும் அதுகுறித்த தெளிவு பலரிடத்தில் இல்லை. எனவே இப்பதிவில் நாம் இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution of India in Tamil) குறித்து பார்க்கலாம்.
Table of Contents
இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution of India in Tamil)
- இந்திய அரசியலமைப்பு சட்டமானது இந்தியாவின் அரசியல் கொள்கைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள் மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் போன்ற கட்டமைப்புகளை உள்ளடக்கியது ஆகும்.
- அதுமட்டுமின்றி இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் தான் இதுவரை மற்ற உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிகவும் நீண்ட அரசியலமைப்பு சட்டமாகும். இந்த தொகுப்பில் மொத்தம் 25 பிரிவுகள் உள்ளது. மேலும் 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன.
- இந்த அரசியலமைப்பு சட்டமானது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பையும் கொண்டுள்ளது. மேலும் இந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தினால் தொடங்கப்பட்டது.
- அன்று தொடங்கி, அதன் பின்னர் முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் இந்தியா ஓர் ஒருங்கிணைந்த மற்றும் தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது.
கடன்களின் பொதி எனப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டம்
- நம் இந்திய நாட்டின் அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவே நம் இந்திய அரசமைப்பு சட்டத்தைக் கடன்களின் பொதி என்றும் அழைப்பர்.
- இவற்றில் கூட்டாட்சி முறையைக் கனடாவில் இருந்தும், அடிப்படை உரிமைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும் மற்றும் அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அதுமட்டுமின்றி அரசியல் சட்டத்திருத்த முறையைத் தென்னாப்பிரிக்காவிடம் இருந்தும், மாநிலங்களவை எம்.பி.,க்கள் நியமன முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்று தான் நம்முடைய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் வரலாறு (History of Indian Constitution)
- இந்திய கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் அனைத்தும் 1858-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியின் கீழ் தான் இருந்தது. இந்த நிலையில் தான் இந்தியா வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக இந்திய சுதந்திர இயக்கம் முயர்ச்சித்து வந்தது.
- இந்நிலையில் 1934-ம் ஆண்டு இந்தியாவிற்கு ஓர் அரசியல் நிர்ணய மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936 மற்றும் 1939-ம் ஆண்டிலும் இந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளுக்கு இனங்க கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய மன்றத்தை உருவாக்கலாம் என முடிவு செய்தது.
- இதன் மூலம் 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் பரிந்துரை செய்யப்பட்டது. இதன் விளைவாக தான் இதற்கு பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு 1946-ம் ஆண்டு மே மாதம் அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனறுப் பரிந்துரைத்தது.
- இதன்படி அரசியல் நிர்ணய மன்றத்திற்கான தேர்தல், ஜூலை மாதம் 1946-இல் நடைபெற்றது. அதன் பிறகு 1946-ம் ஆண்டு டிசம்பரில் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. அப்போது அம்மன்றத்தின் தற்காலிக தலைவராகச் சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-இல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-தேதி பிரித்தானிய இந்தியா என்பது இந்திய மாகாணம் மற்றும் பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. எனவே நம் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய மன்றம் செய்ய வேண்டியிருந்தது. அதன் பிறகு தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் (Constituent Assembly of India) என்பது இந்தியாவின் அரசியலமைப்பினை தொகுக்கவும் மேலும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நாடாளுமன்றமாக பணியாற்றவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1946-இல் உருவாக்கப்பட்டது மொத்தம் 389 உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு 15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
- இந்த மன்றத்தில் ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாகவும இருந்தனர்.
- அதுமட்டுமின்றி தாழ்த்தபட்ட வகுப்புகளைச் சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.
- இந்திய அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா இருந்தார். அதன் பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அரசமைப்பானது டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடியது.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Constitution Drafting Committee)
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு என்பது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவாகும். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவரும் உட்பட ஏழு பேர் கொண்டக் குழு ஒன்று (Drafting committee) உருவாக்கப்பட்டது.
- பீ. இரா. அம்பேத்கர்
- என். கோபாலசாமி அய்யங்கார்
- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
- கே. எம். முன்ஷி
- சையது முகமது சாதுல்லா
- என். மாதவ ராவ்
- டி. டி. கிருஷ்ணமாச்சாரி
ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவானது தனது அறிக்கையை 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ஒப்படைத்தது. அதன் பிறகு முழுவடிவம் பெற்ற சட்ட வரையறை 1949-ம் ஆண்டு நவம்பர் 26-இல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவரான இராஜேந்திரப் பிரசாத்த் அவர்களின் கையொப்பம் பெற்றது.
அதன் பிறகு ஜனவரி 24-இல் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாளில் இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதன் நினைவாக தான் ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியக் குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: President Name List of India: இந்தியாவின் குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல்..! |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை என்பது இந்திய அரசியலமைப்பின் அறிமுகப்பகுதி ஆகும்.
“நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாகக் கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட; மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட. இந்த 1949, நவம்பர் 26-ஆம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய மன்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்றுச் சட்டமாக்கி நமக்கு தருகிறோம்” |
இந்திய அரசியலமைப்பில் உள்ள பகுதிகள்
- இந்திய அரசியலமைப்பு 22 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி 1 (1-4) | இந்திய அரசு பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை. |
பகுதி 2 (5-11) | இந்திய குடியுரிமை பற்றியது. |
பகுதி 3 (12-35) | அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள். |
பகுதி 4 ( 36-51) | அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள். |
பகுதி 4A (51 A) | அடிப்படை கடமைகள்.(1976-ஆம் ஆண்டு 42-ஆவது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது) |
பகுதி 5 (52- 151) | ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசுத் தலைவர்,துணைக் குடியரசுத் தலைவர், நடுவண் அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு. |
பகுதி 6 (152-237) | மாநில அரசமைப்பு, ஆளுநர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு. |
பகுதி 7 (238) | அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது. |
பகுதி 8 (239 -242) | ஒன்றியப் பகுதிகள் குறித்து. |
பகுதி 9 (243-243O) | உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. |
பகுதி 9A (243P-243Z,243ZA-243ZG) | நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. |
பகுதி 10 (244) | பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து. |
பகுதி 11 (245-263) | ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு. |
பகுதி 12 (264-300) | அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள். |
பகுதி 13 (301- 307) | இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள். |
பகுதி 14 (308-323) | அரசுப் பணிகள் |
பகுதி 14A ( 323ஏ, 323 பி) | ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள். |
பகுதி 15 (324-329) | தேர்தல்கள், தேர்தல் ஆணையம். |
பகுதி 16 (330-342) | பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி. |
பகுதி 17 (343-351) | அலுவல் மொழி, வட்டார மொழி,நீதி மன்றங்களில் மொழி. |
பகுதி 18 (352-360) | அவசர நிலைக்கானது பிரகடனம் (எமெர்ஜென்சி) |
பகுதி 19 (361-367) | இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில) |
பகுதி 20 (368) | இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை. |
பகுதி 21 (369-392) | தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள் |
பகுதி 22 (392-395) | குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை. |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணைகள்
தற்போது வரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 11 அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இனி பார்க்கலாம்.
முதலாம் அட்டவணை | Articles 1 மற்றும் 4 |
2-ம் அட்டவணை | (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 மற்றும் 221) |
3-ம் அட்டவணை | Articles 75(4), 99, 124(6) |
4-ம் அட்டவணை | Articles 4(1) மற்றும் 80(2) |
5-ம் அட்டவணை | Article 244(1) |
6-ம் அட்டவணை | Articles 244(2) மற்றும் 275(1) |
7-ம் அட்டவணை | Article 246 |
8-ம் அட்டவணை | Articles 344(1) மற்றும் 351 |
9-ம் அட்டவணை | Article 31-B |
10-ம் அட்டவணை | Articles 102(2) மற்றும் 191(2) |
11-ம் அட்டவணை | Article 243-G |
12-ம் அட்டவணை | Article 243-W |
இப்பதிவில் நாம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி முக்கிய தகவல்களை பார்த்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதையும் படியுங்கள்: Tamil Nadu State Symbols: தமிழ்நாட்டின் சின்னங்கள் மற்றும் அதன் சிறப்புகள்..! |
FAQ – இந்திய அரசியலமைப்பு சட்டம்
1. இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையடைந்து ஏற்கொள்ளப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
3. இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை அத்தியாயங்களை கொண்டது?
இந்திய அரசியலமைப்பு 22 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
4. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அட்டவணைகளின் எண்ணிக்கை?
தற்போது வரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 11 அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
5. இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கியவர் யார்?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கியவர் பீ. இரா. அம்பேத்கர் ஆவார்.