ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் கணபதி பாளையத்தில் அமைந்துள்ள சுங்கத்து கருப்பராயன் கோயிலில் நிகழ்ந்த ஒரு விபரீத சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நிகழ்வின் போது, புகை காரணமாக அருகிலிருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென கலைந்து, அங்கிருந்த மக்களை தாக்கியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 8 வயது சிறுவன் தர்ஷன், தனியார் பள்ளி ஆசிரியர் ஞானசேகரன், மாதேஸ்வரி, சமையல் செய்து கொண்டிருந்த காந்தி, நஞ்சுண்டன், ராஜன் உள்ளிட்டோர் உள்ளடங்குவர்.
தாக்குதலில் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஆறு பேர் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். தற்போது அனைவரும் கண்காணிப்பு நிலையில் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் போன்று ஆன்மிக உற்சாகம் நிறைந்த நிகழ்வில் இத்தகைய திடீர் விபரீதம் ஏற்படுவது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.