இன்றைய காலகட்டத்தில் பலர் அதிக உடல் எடை காரணமாக கஷ்டப்படுகின்றனர். அந்த உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எனவே சிலர் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சிலர் வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக தவறான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதுப்போன்ற சிகிச்சைகளால் பல விதமான பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது.
இப்போது உள்ள சூழலில் அதிக அளவிலான மக்கள் உடல் எடையை குறைப்பதற்காக மேற்கொள்ளும் சிகிச்சைகளில் முக்கியமான சிகிச்சை தான் இந்த உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை. இதனால் பல விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் தான் 52 வயதான செல்வநாதன். இவர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 26 வயதில் ஹேமச்சந்திரன் மற்றும் ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தான் உடல் எடை (156) அதிகமாக உள்ள காரணத்தால் அதனை குறைக்க வேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார்.
அப்போது அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் ஹேமச்சந்திரனுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் சில மருத்துவ பரிசோதனைகள் செய்தபிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வரை ஆகும் என கூறியுள்ளனர். எனவே அவர் ரூ.4 லட்சம் செலவில் அதே சிகிச்சை அளிப்பதாக கூறிய மற்றொரு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பிறகு அவருக்கு கடந்த 22-ம் தேதி அறுவை சிகிச்சை (Effects of Weight Loss Surgery) செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கி சிலமணி நேரத்தில் ஹேமசந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் செல்வநாதனிடம் கூறியுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தான் தன் மகன் உயிரிழந்து விட்டதாகவும் கூறி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பம்மல் காவல் நிலையத்தில் செல்வநாதன் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: ஆசிரியர்களுக்கு வார்னிங்..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! |