நீலகிரி மாவட்டத்தில் கோடைக்கால சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக சாலையோரங்களில் மேஃபிளவர் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த மரங்களில் மேஃபிளவர்கள் அதிகம் பூத்து குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், டிலோனிக்ஸ் என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மேஃபிளவர், மே மாதத்தில் தான் பூத்துக்குலுங்கும். இந்த மலர்கள் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முதுமலை, கூடலூர், குன்னூர் பகுதிகளில் உள்ள மலைப்பாதைகளில் இந்த மேஃபிளவர் அதிகளவில் பூத்துள்ளது.
பசுமையான மலைகளுக்கு நடுவே உள்ள சாலையின் இருபுறமும் இந்த மேஃபிளவர் (May Flower Tree) பூத்துக்குலுங்கும் இந்த மரங்களின் நடுவே சுற்றுலாப்பயணிகள் நின்று செல்ஃபி எடுத்து வருகின்றனர். இது குறித்து சுற்றுலாப்பயணிகள் கூறும் போது சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகளவில் நடவு செய்தால், கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு மலை மாவட்டத்திற்கு வருவார்கள் என தெரிவித்தனர்.
பெரும்பாலும் மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு அதிகளவு இருக்கும். இந்த வேலையில் கூடலூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ளப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப் பகுதியில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்த்து பசுமை இழந்துக் காணப்படுகிறது. ஆனால் இந்த வேளையில் கோடைக்கால (Kodai kaala malargal) மலர்கள், மேஃபிளவர், கொன்றை,ஜெகரண்டா போன்ற மலர்கள் பல இடங்களில் பூத்து, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது என்றே கூறலாம்.