சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது ‘சவுக்கு மீடியா’ சேனலை முடக்க அரசியல் பின்னணியுடன் நடவடிக்கைகள் நடைபெறுவதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்பு செயலாளரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சவுக்கு ஊடகத்தை முடக்கும் முயற்சியில் காவல் ஆணையாளர் தலையிட்டு செயற்படுகிறார்” எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் விளக்குகையில், “எனது வீட்டில் தாக்குதல் நடந்ததிலிருந்து தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறேன். என் யூடியூப் சேனலில் பணியாற்றும் சத்தியமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று மன அழுத்தம் தருகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஹெல்மெட் அபராத விவகாரத்தை இப்போது எழுப்புவது சாத்தியமில்லை” என்றார்.
அதேசமயம், சென்னை காவல் ஆணையாளர் அருண் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தன்னை இலக்காக வைத்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். “அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தில் ஒரு மாதமாக நடவடிக்கை இல்லை. ஆனால் போக்குவரத்து வழக்கில் இத்தனை அவசரம் – இது அதிகார துஷ்பிரயோகம் தான்” என அவர் சுட்டிக்காட்டினார்.
2026 தேர்தலையும் நினைவில் வைத்தே சவுக்கு மீடியாவை அடக்க முயற்சி நடைபெறுவதாக அவர் கூறினார். அதோடு, “ஆளும் கட்சியைத்தான் விமர்சிக்க முடியும். எதிர்க்கட்சியெல்லாம் செத்த பாம்பு… அதை பேசி என்ன பயன்?” என்ற கடுமையான விமர்சனத்தையும் பதிவு செய்தார்.
இந்த பேட்டி, தமிழக அரசியல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தி இருக்கிறது.