தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா அதிமுக-பாஜக குறித்து விமர்சனம் செய்ததை தொடர்ந்து, அதிமுக ஐ.டி.விங் கடும் பதிலடி கொடுத்துள்ளது. “அருகதையே இல்லை” என எக்ஸில் பதிலடி!
தமிழக அரசியலில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் பெயராக மாறியுள்ளார் ஆதவ் அர்ஜுனா – பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் அவர்களின் மருமகனும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும் ஆவார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “த.வெ.க.யின் எதிரி திமுகவும், கொள்கை எதிரி பாஜகவும் தான். அதனால் அந்த இரண்டு கட்சிகளுடனும் எங்களுக்குக் கூட்டணி இல்லை. அதிமுக பாஜகவுடன் இருக்கிறதாலேயே எங்களுக்கும் அதிமுகவுடனும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை” என வலியுறுத்தினார். இது 2026 சட்டமன்றத் தேர்தல் அணுகும் வேளையில் முக்கியமான அரசியல் கருத்தாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவை எதிர்க்காததற்கு காரணம்?
அதிமுக தற்போது ஒரு தோல்விப் பாதையில் இருக்கும் எதிர்க்கட்சியென்பதை ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டினார். “அவர்கள் ஆட்சியில் இல்லாமல், பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஏற்கனவே மக்களே தண்டனை அளித்துவிட்டார்கள். அதை மீண்டும் நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?” என கூறினார்.
அவரின் இந்தக் கருத்துகள், அதிமுகவின் அரசியல் தாக்கத்தை குறைத்து பார்க்கும் முயற்சியாக சில தரப்பினரால் விளக்கம் பெறப்பட்டது.
அதிமுகவின் பதிலடி!

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) உடனடியாக பதிலடி கொடுத்தது.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அவர்கள் கூறியது:
“தொழிலதிபராக இருந்து திடீரென அரசியல்வாதியாக மாறி, பல கட்சிகளை தாவிய அனுபவமுள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு, அதிமுக பற்றி பேச கூட அருகதையில்லை. இன்று த.வெ.க.வில் இருக்கிறீர்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்பது கூடத் தெரியாது. எனவே, உங்கள் கருத்துக்கு பதிலே தேவையில்லை.”
இந்த பதிலடி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.