லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தகவல் (Vijayakanth Cameo Role) வெளியாகியுள்ளது. இதனை விஜயகாந்தின் மனையும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறியதாவது படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு ஐந்து, ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பேசினார். அதற்கு முன்பே என் மகன் சண்முகபாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார். பிரச்சாரத்தின் நடுவே நான் சென்னை சென்றிருந்தபோது, என்னை நேரில் சந்தித்த அவர், தி கோட் திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
மேலும் விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறியிருந்தார். இன்று விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்துதான் நான் யோசிக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லியிருப்பார்? செந்தூரப் பாண்டி என்ற படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும், விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப்பெரிய பாசம் உண்டு.
எத்தனையோ இயக்குநர்கள் காத்திருந்தபோதும் 17 படங்கள் விஜயகாந்தை வைத்து எஸ்ஏசி இயக்கி இருக்கிறார். அதனால் எப்போதும் அவர் மீது விஜயகாந்துக்கு மரியாதை உண்டு. எனவே இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டனை மீண்டும் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும்போது, அவர் இடத்தில் இருந்து நான் யோசிக்கிறேன். விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார். விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். வெங்கட் பிரபுவை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து இளையராஜா குடும்பத்துடன் நான் பழகி இருக்கிறேன். உனக்கும் விஜய்க்கும் என்னால் ‘நோ’ சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்” இவ்வாறு இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த திரைப்படம் விஜய்யின் 68-வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு The Greatest of All Time என்று பெயர் வைக்கப்பபட்டுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் (The Goat New Update) வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அண்மையில் கூட இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: விசில் போடு…. சர்ச்சைகளுக்கு மத்தியில் சாதனை படைத்த விஜய் பாடல்… |