Homeசெய்திகள்Gaganyaan மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது..! பரிசோதனை முயற்சி வெற்றி!

Gaganyaan மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது..! பரிசோதனை முயற்சி வெற்றி!

இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் முதல் பரிசோதனையாக ஆளில்லா மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் விண்ணில் இன்று (21 அக்டோபர்) காலை 10 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

நேற்று இரவு 7 மணிக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் (Countdown Start) செய்யப்பட்டு, இன்று காலை 8 மணிக்கு Gaganyaan மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என திட்டமிட்டிருந்த நிலையில் வானிலை காரணமாக காலை 8.30 மணியாக மாற்றம் செய்யப்பட்டது. பிறகு காலை 8.45 மணியளவில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ககன்யான் மாதிரி விண்கலம் தாமதமாக இயக்கப்படும் என இஸ்ரோ (ISRO) தலைவர் சோம்நாத் கூறினார். அதன் பிறகு காலை 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்த சாதனை வரிசையில் இந்தியாவும் இணைய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமானது 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கு Gaganyaan என பெயரிடப்பட்டது. பூமியிலிருந்து 400 கி.மீ தூரத்திற்கு மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்வது, அவர்களை எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே இந்த திட்டம். 2025 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் 3 கட்ட சோதனைகளை நடத்தப்போவதாக ISRO முடிவெடுத்து உள்ளது.

மாதிரி விண்கலத்தின் நோக்கம்

இந்த ககன்யான் முதல் மாதிரி விண்கலமானது இன்று காலை 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. 90 நொடிகளில் தரையிலிருந்து 17 கி.மீ உயரம் சென்ற பிறகு விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி மட்டும் தனியாக பிரிந்து மூன்று வகையான பாராசூட் மூலம் மெதுவாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி வங்கக்கடலில் வந்து இறங்கியது, அந்த பகுதியை இந்திய கப்பல் படையின் சிறப்பு வீரர்கள் கடலில் இருந்து மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular